திருப்பூர்:
பஞ்சு விலை குறைந்துள்ளதைத் தொடர்ந்து நூல் விலை கிலோவுக்கு ரூ.15 வரை குறைக்கப்பட்டுள்ளதாக நூற்பாலைகள் அறிவித்துள்ளன.கடந்த 8 மாதங்களாக தொடர்ந்து உயர்ந்து வந்த நூல் விலை தற்போது குறைந்திருப்பது பின்னலாடைத் தொழில்துறையினரிடையே மகிழ்ச்சியையும், நிம்மதியையும் ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தின் மேற்கு மண்டலங்களான கோவை, ஈரோடு, திருப்பூர், கரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் ஜவுளி, ஆயத்த ஆடை உற்பத்தி மற்றும் ஏற்றுமதி பிரதானத் தொழில்களாக உள்ளன.
குறிப்பாக, திருப்பூரில் ஆயத்த ஆடை உற்பத்தி மற்றும் ஏற்றுமதி சார்ந்த ஆயிரக்கணக்கான நிறுவனங்கள் செயல்படுகின்றன. நம் நாட்டில் இருந்து பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் ஆயத்த ஆடைகளில் கணிசமான அளவு திருப்பூரில் உற்பத்தி செய்யப்படுகிறது.
ஆயத்த ஆடை உற்பத்தியில் முக்கிய மூலப்பொருளாக நூல் உள்ளது. பஞ்சு விலையில் ஏற்படும் மாற்றங்களுக்கு ஏற்ப நூல் விலையிலும் மாற்றங்கள் ஏற்படும்.
கடந்த மே மாதம் மத்திய அரசு பருத்தி இறக்குமதிக்கான 11 சதவீத வரியை ரத்து செய்து உத்தரவிட்டது. இதனால் இறக்குமதி அதிகரித்து, நூல் விலை குறையும் என பின்னலாடைத் தொழில்துறையினர் எதிர்பார்த்தனர். ஆனால், அதற்கு மாறாக நூல் விலை தொடர்ந்து உயர்ந்து வந்தது. மாதந்தோறும் கிலோவுக்கு ரூ.7 முதல் ரூ.10 வரை விலை உயர்த்தப்பட்ட நிலையில், நடப்பாண்டு தொடக்கத்தில் இருந்து கடந்த ஆகஸ்ட் மாதம் வரை நூல் விலை கிலோவுக்கு மொத்தமாக ரூ.82 வரை உயர்ந்தது.
இந்நிலையில், தற்போது நூல் விலையை கிலோவுக்கு ரூ.15 வரை குறைத்து நூற்பாலைகள் அறிவித்துள்ளன. கடந்த ஆகஸ்ட் மாதம் ஒரு கேண்டி பஞ்சின் விலை ரூ.73 ஆயிரமாக இருந்த நிலையில், தற்போது ரூ.65 ஆயிரமாக குறைந்துள்ளது. இதனால் நூல் விலை குறைக்கப்பட்டுள்ளதாக நூற்பாலைகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து 8 மாதங்களாக உயர்ந்து வந்த நூல் விலை தற்போது ரூ.15 குறைந்திருப்பது பின்னலாடைத் தொழில்துறையினருக்கு ஓரளவு நிம்மதியை அளித்துள்ளது. மேலும், வரும் மாதங்களிலும் பஞ்சு விலை தொடர்ந்து குறையும் பட்சத்தில், நூல் விலையும் மேலும் குறைய வாய்ப்புள்ளதாக தொழில்துறையினர் தெரிவித்துள்ளனர்.
நடப்பு மாதத்துக்கான நூல் விலை
நடப்பு மாதத்துக்கான நூல் விலை விவரம் (கிலோவுக்கு):
நூல் வகை விலை
10-ம் நம்பர் கோம்டு ரூ.250
16-ம் நம்பர் கோம்டு ரூ.259
20-ம் நம்பர் கோம்டு ரூ.318
24-ம் நம்பர் கோம்டு ரூ.330
30-ம் நம்பர் கோம்டு ரூ.340
34-ம் நம்பர் கோம்டு ரூ.360
40-ம் நம்பர் கோம்டு ரூ.378
20-ம் நம்பர் செமி கோம்டு ரூ.315
24-ம் நம்பர் செமி கோம்டு ரூ.323
30-ம் நம்பர் செமி கோம்டு ரூ.326
34-ம் நம்பர் செமி கோம்டு ரூ.349
40-ம் நம்பர் செமி கோம்டு ரூ.368